மற்றவர் என்ன நினைப்பாரோ என்ன கவலை ஏன்? உங்களுக்கு எது தேவை என்பதை சிந்தியுங்கள்!
உலகில் யாருமே பூரணத்துவம் பெற்றிருக்கவில்லை. அவர்கள் செய்யும் வேலையில், எவ்வித குற்றமுமில்லாமல் இருப்பதில்லை. இது, மனோதத்துவம் ஒப்புக் கொண்டுள்ள உண்மை... ஆனால், சாமானிய மனிதர்கள் தான், இதை ஒத்துக் கொள்வதில்லை. நம் வெற்றிக்கு முட்டுக் கட்டை பல உருவங்களில் வந்து நம்மை தாக்கும். மிக எளிதான ஒரு வேலையைக் கூட சில சமயங்களில் செய்ய முடியாமல் போகும். என்ன காரணங்களாய் இருக்கும் என்று அலசி ஆராய்ந்து பார்க்கும் போது, சில உண்மைகள் வெளிவரும்.
ஒரு வெற்றிக்கு நம் இலக்கை தேர்ந்தெடுப்பதில் ஆரம்பித்து, மனதில் அதை விதையாக ஊன்றி, கடினமாய் உழைத்து, ஆழ்ந்த கவனம் வைத்து, புதுமைகளை புகுத்தி, சமயோசித புத்தியுடன், காலம் தாழ்த்தாமல் திட்டமிட்டு அனைத்தையுமே சரியாகவே செய்திருந்தாலும், எங்கோ, எதிலோ, 'கோட்டை' விட்டிருப்போம். அது, எங்கு, எதில் என்பதில் கூட நமக்கு போதிய பார்வை இருக்காது.
மற்றவர் கண்ணோட்டத்திற்கு மதிப்பு வேண்டாமே!: அது... மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பர் என்று, தேவையில்லாமல் நாமே நமக்குள் நினைத்துக் கொள்ளும் ஒரு கண்ணோட்டம். நம்மைப் பற்றிய நம் கண்ணோட்டத்தை விட, மற்றவர்கள் கண்ணோட்டத்திற்கு, நாம் பெரிதாக மதிப்பளிக்க ஆரம்பிக்கும் போதே, நாம் மனதளவில் நம்மை தாழ்த்திக் கொள்ளத் துவங்கி விடுவது தான்...
எனக்கு திருமணமான புதிதில், 25 ஆண்டுகளுக்கு முன் சுடிதாரும், பாவாடை சட்டையும் அணிந்து, என் கணவருடன் இருசக்கர வாகனத்தில் போக வேண்டும் என்ற ஆசை, மனதிலேயே சுழன்றுக் கொண்டிருந்தது. கணவர் தவறாக எடுத்துக் கொள்வாரோ என்ற கூச்சமும், தயக்கமும் மனதில் ஏற்பட, வீட்டில் பெரியவர்கள் என்ன சொல்வரோ என்ற பயமும் என்னை தடுத்து விட்டது. பல ஆண்டுகளுக்குப் பின், இதை வெளியில் கூறினேன். 'இதெல்லாம் ஒரு விஷயமா... நீ உன் விருப்பப்படி உடை அணிந்திருக்கலாமே' என, என் கணவர் கூறிய போது, என்னை நினைத்து நானே வெட்கப்பட்டுக் கொண்டேன்.
இது, பார்க்க, கேட்க சின்ன விஷயமாய் தோன்றும்; ஆனால், நாம் எல்லாரும் இப்படி சின்ன விஷயங்களில் கூட, 'பிறர் அபிப்ராயம்' என்ற ஒரு மோசமான, ஊனமுற்ற மனநிலைக்குச் சென்று விடுகிறோம். சின்ன சின்ன விஷயங்களில், கவனமும், ஈடுபாடும் வைக்காததால் தான், மிகப் பெரிய விஷயங்களில், 'கோட்டை' விட்டு விடுகிறோம்.
நாம் குழந்தையாக இருக்கும்போது, நம் வளர்ப்பு முறையும் இதைச் சார்ந்தே இருக்கிறது. பெரியவர்களது ஆமோதிப்பை எதிர்நோக்கி வாழும் ஒரு முறையில் தான் வளர்க்கப் படுகிறோம். வீட்டிற்கு வந்த விருந்தாளிகள் தரும் பொருளை, உடனே வாங்கிக் கொண்டால் அவர்கள் என்ன நினைப்பரோ என்பதில் ஆரம்பித்து, 'பாத்ரூம்' போக, மற்ற பிள்ளைகள் முன் ஆசிரியரிடம் அனுமதி வாங்குவதில் ஏற்படும் தயக்கம் வரை நம் தேவை, விருப்பம் தாண்டி, மற்றவர்கள் என்ன நினைப்பரோ என்ற கட்டத்திலேயே நின்று விடுகிறோம்.
நம் காரியத்தை மட்டும் பார்ப்போம்!: நாம் செய்யும் காரியங்களையும், அதன் விளைவுகளையும் மறந்து, அடுத்தவர்களின் அபிப்ராயத்திற்கு அதிக மதிப்புக் கொடுப்பதால், நம் காரியம் முழுதாக நடைபெறாமல், அதனால் மனம் புழுங்குவது வழக்கமாகி விட்டது.
முன்னேற நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும், இந்த எண்ணம் சாகடித்து விடும். முளையிலேயே முயற்சி சாகடிக்கப்படுவதால், முன்னேற்றம் எங்கிருந்து வரும்? இந்த பயத்திலேயே பலர் மற்ற தகுதிகளை, திறமைகளை கைவிட்டு விடுகின்றனர்.
இந்த அச்சம் இருக்கும் பட்சத்தில், படைப்புத் திறனோ, முன்னேற வேண்டும் என்கிற உந்துதலோ இருக்காது. நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரியாது; புரியாது. முதலில், இந்த எண்ணத்திலிருந்து வெளியில் வர வேண்டும். இப்படிப்பட்ட எண்ணத்தில் இருப்பது, இருளில் இருப்பதற்குச் சமம்; வெளியில் வந்து விட வேண்டும் என்று முனைவது முதல் படி.
மற்ற தடைகளை வரிசையாக களைய வேண்டும்... மனதில் ஆழப் பதிந்துள்ள எதிர்மறை எண்ணம், தாழ்வு மனப்பான்மை, பயம், தயக்கம், ஒப்பீடு என, அனைத்திலிருந்தும் வெளிவர முயற்சி செய்ய வேண்டும்.
தவறை சரி செய்ய வேண்டும்
நாம் செய்யும் அனைத்துமே, நூறு சதவீதம் சரியாக இருக்க வேண்டும் என, எண்ணுவது நல்லது தான்; அதற்காக, அதற்குக் கீழே செயல்திறன் குறைந்தால், மனம் நொந்து போகாமல், மற்றவர்கள் என்ன சொல்வரோ எனத் தயங்காமல், 'தவறை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்' என, சிந்தித்து செயல்பட வேண்டும்.
நீங்கள் செய்த, செய்யும் ஒரு காரியத்தில் தோல்வி தான் வரட்டுமே... அதைப் பற்றி மற்றவர் என்ன சொல்வர் என்பதை விடுத்து, நாமே பழகணும்... ஏன், எப்படி, எதனால் என யோசித்து, மீண்டும் இதே காரண காரியங்களால், இந்த தோல்வி வராமல் நடந்துக் கொள்வது தான் நமக்கு நல்லது.
வெற்றியை நோக்கி செல்லும் பயணத்தில், பிறர் கருத்துகளையும், அதிருப்தியையும் சமாளிக்க தெரிந்திருக்க வேண்டும். பிறர் குறை கூறும்போது, சோர்ந்து போகாதீர்கள்; பிறர் இப்படி இருக்கின்றனரே என்று, உள்ளுக்குள் பொருமாதீர்கள். இருக்கும் நிலையை ஏற்றுக் கொள்ளுங்கள்; தீர்வு காணுங்கள்...
ஒருவன் செய்யும் செயல் அவனுக்கோ, மற்றவர்களுக்கோ, தீமை விளைவிக்காத வரையில், எதிர்பார்த்த விளைவுகளை அந்த செயல் தரும் வகையில், அது சரியானதே! ஒருவன் மனமுவந்து, அன்புடன் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி, தன் கடமைகளை செய்யும் போது நல்லதே விளைகிறது; அந்த செயல், நல்லதாகவே அமைகிறது!
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment