ஒரு ஊரில் ஒரு கணவன் மனைவி இருந்தனர் அவர்களுக்கு 12 ஆண்டுகள் கழித்து ஒரு மகன் பிறந்தான்.அந்த குழந்தையை இரண்டு பேரும் கண் போல் காப்பாற்றி வந்தனர். ஒரு நாள் அந்த 2 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது, அதன் அருகில் ஒரு மருந்து பாட்டில் திறந்து இருப்பதை அவன் தந்தை பார்த்தார்.வேளைக்கு போகும் அவசரத்தில் மனைவியிடம் அதை மூடி வைக்குமாறு சொல்லிவிட்டு சென்று விட்டார். அவர் மனைவியும் சரிங்க என்று சொல்லிவிட்டு சமையல் வேலையில் மூழ்கிவிட்டாள்.குழந்தை விளையாடும் போது அந்த பாட்டிலை பார்த்தது, அது கொஞ்சம் குடித்து பார்த்தது இனிப்பாக இருக்கவே முழுவதையும் குடித்துவிட்டது. சமையல் வேலை முடித்து வெளியே வந்த தாயாருக்கு ஒரே அதிர்ச்சி குழந்தை கையில் மருந்து பாட்டிலுடன் மயங்கி கிடந்தது.உடனடியாக பதறி அடித்துக்கொண்டு குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கி சென்றாள் . மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு பெரியவர்கள் எடுத்து கொள்ளும் மருந்தை குழந்தை அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டதால் குழந்தை இறந்து விட்டது என்று கூறிவிட்டார்கள். குழந்தை மருந்தை குடித்து இறந்து விட்டது என்று எப்படி கணவனிடம் சொல்வது என்று பயந்து கொண்டிருந்தாள்.தனது கணவன் என்ன சொல்வாரோ என்று தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள். குழந்தை இறந்த செய்தியை கேள்விப்பட்டு பதறி அடித்து மருத்துவமனைக்கு ஓடி வந்தார் அவன் தந்தை.மனைவியை பார்த்தவுடன் ஓடி வந்து கட்டி அணைத்து நம்ம குழந்தை அநியாயமாக இறந்து விட்டதே என்று கதறி அழுதார் ,பரவாயில்லையம்மா உனக்கு நான் இருக்கிறேன் என்று ஆறுதல் கூறினார். அந்த தந்தையின் ஆறுதல் வார்த்தைகளை கேட்டு அவன் மனைவி மற்றும் அங்கு இருப்பவர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டு போனார்கள்.குழந்தை இனி வரப் போவதில்லை, அவன் மனைவி மருந்து பாட்டிலை மூடி வைத்துயிருந்தால் குழந்தை இறந்திருக்காது இவ்வளவு நடந்தும் மனைவியை திட்டாமல் ஆறுதல் சொல்கிறானே என்று அதிசயித்தனர். அவன் தாயை திட்டுவதால் எதுவும் நடந்துவிட போவதில்லை.பத்து மாதம் தன் வயிற்றில் சுமந்த தாய்க்கே வலி அதிகம்,பாலூட்டி வளர்த்த தாய்க்கே குழந்தையின் இறப்பு மிகப்பெரிய இழப்பு.இப்படிப்பட்ட நேரத்தில் அவளை திட்டுவது நியாயமில்லை.இந்த நேரத்தில் தான் கணவனுடைய அன்பும் அரவணைப்பும் தேவை .அதை தான் அவள் கணவனும் செய்தான். நீதி: ஆகவே நண்பர்களே இப்படிப்பட்ட நேரத்தில் அடுத்தவர் மேல் பழி போடாமல் அவர்க்ளுக்கு ஆறுதல் கூறுங்கள்...ஆறுதலே சிறந்த மருந்து..

Share/Bookmark

ஆறுதலே சிறந்த மருந்து...


வெற்றிகரமான திருமண வாழ்க்கை ரகசியத்தை உணர்த்தும் கதை.....! திருமண வாழ்க்கையை எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்த ஜோடிகள் தங்களது 25வது திருமண நாளைக் கொண்டாடினார்கள். ஊரையேக் கூட்டி விருந்து வைத்து தங்களது திருமண நாளைக் கொண்டாடிய தம்பதியினரைப் பற்றி அறிந்த அந்த ஊர் செய்தியாளர் ஒருவர், அவர்களைப் பேட்டிக் கண்டு பத்திரிக்கையில் போட விரும்பினார். நேராக அந்த தம்பதிகளிடம் சென்று, 25ஆம் திருமண நாளை ஒற்றுமையாகக் கொண்டாடுவது என்பது பெரிய விஷயம். இது உங்களால் எப்படி முடிந்தது. உங்களது திருமண வாழ்வின் வெற்றி ரகசியம் என்ன என்று கேட்டார். இந்த கேள்வியை கேட்டதும், அந்த கணவருக்கு தனது பழைய தேனிலவு நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தது. "நாங்கள் திருமணம் முடிந்ததும் தேனிலவுக்காக சிம்லா சென்றோம். அங்கு எங்களது பயணம் சிறப்பாக அமைந்தது. அப்பகுதியை சுற்றிப் பார்க்க நாங்கள் குதிரை ஏற்றம் செல்வது என்று தீர்மானித்தோம். அதற்காக இரண்டு குதிரைகளைத் தேர்ந்தெடுத்து, இருவரும் ஒவ்வொரு குதிரையில் ஏறிக் கொண்டோம். எனது குதிரை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருந்தது. ஆனால் என் மனைவி சென்ற குதிரை மிகவும் குறும்புத்தனமானதாக இருந்தது. திடீரென ஒரு துள்ளலில் என் மனைவியை அது கீழேத் தள்ளியது. அவள் கீழே இருந்து எழுந்து சுதாரித்துக் கொண்டு அந்த குதிரையின் மீது மீண்டும் ஏறி அமர்ந்து கொண்டு, "இது தான் உனக்கு முதல் முறை" என்று அமைதியாகக் கூறினாள். சிறிது தூரம் சென்றதும் மீண்டும் அந்த குதிரை அவ்வாறே செய்தது. அப்போதும் என் மனைவி மிக அமைதியாக எழுந்து குதிரையின் மீது அமர்ந்து கொண்டு "இது தான் உனக்கு இரண்டாம் முறை" என்று கூறியவாறு பயணிக்கத் தொடங்கினாள். மூன்றாம் முறையும் குதிரை அவ்வாறு செய்ததும், அவள் வேகமாக அவளது கைத்துப்பாக்கியை எடுத்து அந்த குதிரையை சுட்டுக் கொன்றுவிட்டாள்!!! இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. நான் அவளை திட்டினேன். "ஏன் இப்படி செய்தாய்? நீ என்ன முட்டாளா? ஒரு விலங்கைக் கொன்று விட்டாயே? அறிவில்லையா?" என்று கேட்டேன். அவள் மிகவும் அமைதியாக என்னைப் பார்த்து, "இதுதான் உங்களுக்கு முதல் முறை" என்றாள். அவ்வளவு தான். அதன் பிறகு எங்களது வாழ்க்கை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருக்கிறது என்றார் கணவர். இப்படி தான் பலரது வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. உண்மை தானே..!

Share/Bookmark

வெற்றிகரமான திருமண வாழ்க்கை ரகசியத்தை உணர்த்தும் கதை.....!