சென்னை பிராட்வேயில் பிறந்து வளர்ந்து தற்போது பூந்தமல்லியில் வசித்து வருகிறார் கங்காதரன். வழக்கொழிந்த பாரம்பரிய எண்ணெய் உற்பத்தி முறையான மரச் செக்கு எண்ணெய் உற்பத்தித் தொழிலை நவீனமாக மேற்கொண்டு வெற்றி பெற்றுள்ளார். இவரது அனுபவம் இந்த வாரம் ``வணிக வீதி’’-யில் இடம் பெறுகிறது.
சிறு வயதிலேயே குடும்பத் தொழிலை பழக்கி விடுவதுதான் எங்கள் சமூகத்தில் வழக்கம். அப்பா நகைக் கடை வைத்திருந்தார். ஆனால் என்னோடு சேர்த்து ஆறு பேர் உடன்பிறந்தவர்கள் என்பதால் யாராவது ஒருவர் நகை தொழிலை செய்யட்டும், பிறர் வேறு வேறு வேலைகளில் கவனம் செலுத்துங்கள் என அப்பா அடிக்கடி சொல்வார். நான் பனிரெண்டாவது வரைதான் படித்தேன். பிறகு நகைத் தொழிலில் கொஞ்ச நாளும், சில ஆண்டுகள் பங்கு சந்தை முகவர் ஒருவரிடமும் பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. கணினி பயன்பாடுகள் வந்தபோது அந்த முகவர் அதற்கு பொருந்திப்போகாமல் தொழிலிலிருந்து விலகிவிட்டார். நானும் வேறு வேலை மாற வேண்டிய சூழ்நிலையில் பெண்களுக்கான காலணிகளை தயாரிக்கும் தொழிலில் இறங்கினேன்.
காலை முதல் மாலை வரை உற்பத்தி வேலைகள், மாலை 5 மணிக்கு பிறகு மாடல் செருப்புகளை எடுத்துக் கொண்டு சில்லரை விற்பனைக் கடைகளுக்கு ஆர்டர் எடுக்க செல்வது. இப்படி அந்த தொழிலை மேற்கொண்டுவந்த நிலையில் சில தொடர்புகளால் ரியல் எஸ்டேட் தொழிலும் பழக்கமானது. ரியல் எஸ்டேட் தொழிலில் தோட்ட வீடுகள் மற்றும் பண்னை வீடுகள் விற்பனையில் கவனம் செலுத்தினேன்.
தோட்ட வீடுகள் என்றால் இரண்டு கிரவுண்ட் நிலத்தில் ஒரு கிரவுண்டுக்கு மரம் மற்றும் செடி வகைகளை வைத்து ஐந்து ஆண்டுகள் பராமரித்து விற்பனை செய்வது. இப்படி தொழிலுக்கு தேவையென்றுதான் இயற்கை தோட்டம் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினேன். நாளடைவில் எனக்கே ஆர்வம் வந்து அது தொடர்பான நூல்கள் வாங்கி படிப்பது, இயற்கை வேளாண்மை கண்காட்சிகளுக்கு செல்வது என வளர்ந்தது. இதன் தொடர்ச்சியாக ரியல் எஸ்டேட் தொழிலில் இருந்து வெளியேறலாம் என முடிவெடுத்தேன். தவிர இந்த காலகட்டத்தில் இயற்கை வேளாண் பொருட்கள் ஆர்வலர் ரீஸ்டோர் அனந்தை சந்தித்து பேசியபோது அவர் மர செக்கு எண்ணையின் தேவை, அதை தொழிலாக மேற்கொள்வதற்கான சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
என்னால் இந்த தொழிலை எடுத்து செய்ய முடியும் என்கிற நம்பிக்கையில் இது குறித்த தேடலை தொடங்கினேன். ஒரு இடத்தில் கிடைத்த பழைய மரசெக்கை வாங்கி அதை நவீனமாக மாற்றினேன். இதற்கு பிறகு எனது தேவைக்கு ஏற்ப ஆறு மர செக்குகளை ஆட்களை வைத்து செய்து கொண்டேன்.
மரச் செக்கு எண்ணெயில் பல அறி வியலும் இருப்பது பிறகுதான் தெரிந்தது. குறிப்பாக எண்ணெய் வித்துக்கள் அரைபடும்போது உராய்வினால் வெப்பம் வெளிப்படும். இயந்திரங்கள் மூலம் எண்ணெய் பிரிக்கிறபோது அதிக வெப்பத்தால் அதிலிருந்து கிடைக்கும் சத்துக்கள் கெட்டுவிடும். மேலும் எண்ணெயும் கருத்துவிடும். இதை சரிசெய்ய பல்வேறு பிராசசிங் நடக்கிறது. ஆனால் மரசெக்கில் அரைக்கிறபோது அதிக வெப்பம் வெளிவராது என்பதால் எண்ணெயில் உள்ள சத்துகள் அப்படியே இருக்கும். இந்த அனுபவ தேடலுக்கு சுமார் மூன்று ஆண்டுகள் ஆனது. இந்த காலகட்டத்தில் என் குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம்
எள், கடலை போன்ற எண்ணெய் வித்துக் களை சுற்று வட்டாரங்களில் நேரடியாக வாங்குவதற்கு ஏற்ப திருமால்பூர் அருகில் ஆலையை தொடங்கினேன். அக்மார்க் முத்திரையும் வாங்கியுள்ளேன். முதலில் உறவினர்கள், நண்பர்களுக்கு விற்பனை என தொடங்கி இப்போது பேஸ்புக் தொடர் புகள் மூலம் சென்னை திருவள்ளூர், காஞ்சி புரம் வரை நேரடியாக வீட்டுக்கு கொடுத்து வருகிறோம். தற்போது 7 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறேன்.
மரச் செக்கு எண்ணெய்க்கான தேவையும் அதிகமாக உள்ளது. இதை உள்ளூர் அளவில் பலரும் மேற்கொள்ள முன்வரவேண்டும். மூன்று லட்சம் முதலீட்டில் மாதம் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும். நான் அவர்களுக்கு உதவி செய்யவும் தயாராக இருக்கிறேன். பல்வேறு தொழில்களுக்கு பிறகு, உடலுக்கு நல்லது செய்யும் இந்த தொழிலை மனதுக்கு நிறைவாக மேற்கொண்டு வருகிறேன் என்றார்.
லாபம் தரும் தொழில் என்பது அந்த தொழில்முனைவருக்கு மட்டும்தான் அங்கீகாரம். ஊருக்கும் சேர்த்து யோசிக்கும் தொழில்களுக்கு சமூகம் உரிய அங்கீகாரம் தரட்டும்.
மரசெக்கில் அரைக்கிறபோது அதிக வெப்பம் வெளிவராது என்பதால் எண்ணெயில் உள்ள சத்துகள் அப்படியே இருக்கும். இந்த அனுபவ தேடலுக்கு சுமார் மூன்று ஆண்டுகள் ஆனது. இந்த காலகட்டத்தில் என் குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம்
maheswaran.p@thehindutamil.co.in
உன்னால் முடியும்: தேவை உணர்ந்து செயல்பட வேண்டும்
உன்னால் முடியும்: தேவை உணர்ந்து செயல்பட வேண்டும்
Subscribe to:
Posts
(
Atom
)