முதல் கோணம்:

கர்மவினை, அதிர்ஷ்டம், தெய்வம், தலையெழுத்து, விதி, பிராப்தம், கொடுத்து வைத்தவன், பாவம் பண்ணியவன், புண்ணி யம் செய்தவன், பூர்வ புண்ணியம், கிரகக் கோளாறு ஆகிய அத்தனையும் முற்பிறவி களில் சேமித்த செயல்பாட்டைச் சுட்டிக் காட்டுகின்றன. அதை 'கர்ம சித்தாந்தம்’ என்கிறது சாஸ்திரம்.
'மீண்டும் பிறப்பு, மீண்டும் இறப்பு, மீண்டும் கருவறையில் தோன்றுதல்... இப்படி பிறப்பு- இறப்பு எனும் சுழற்சியில் அகப்பட்டுத் தவிக்கிறார்கள்’ என்கிறார் ஆதிசங்கரர் (புனரபி ஜனனம், புனரபி மரணம், புனரபிஜனனீஜடரே சயனம்). அந்தப் பிறப்புக்குக் காரணம் கர்மவினை என்றும் கூறுகிறார். முற்பிறவியில் செய்த செயல்பாடுகளை, அதாவது இன்பம், துன்பம் இரண்டையும் உணர திரும்பவும் ஒரு பிறவி தேவைப்படுகிறது. ஆகையால், சேமித்த செயல்பாட்டை அனுபவிக்க பிறவி எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. 'ஆடைகள் கிழிந்து அல்லது நைந்துபோனால் அதைக் களைந்து புது ஆடைகளை ஏற்போம். ஆடை போன்ற உடல் தளர்ந்துபோனால், அதாவது உடலானது செயல்படும் தகுதியை இழந்துவிட்டால், அதைத் துறந்துவிட்டுப் புது உடலை ஏற்கவேண்டியது வரும்’ என்று கண்ணன் சொல்வான் (வாசாம்சி ஜீர்ணானியதாவிஹாய:....).
இப்படி, முற்பிறவி கர்மவினையானது மீண்டும் ஓர் உடலெடுக்கக் காரணம் ஆகாமல் இருக்கவேண்டும் எனில், கர்மவினையை உருத் தெரியாமல் கரைத்துவிடவேண்டும். அப்போது அதை அனுபவிக்க இடமில்லாததால், மறுபிறவி தேவையற்றுப் போகும். கர்ம வினையைக் கரைக்க 'தவம்’ ஒன்றே கைகொடுக்கும். நாம் செய்த கர்ம வினையை நாமே செயல்பட்டுத் தவமிருந்து கரைக்கவேண்டும்.
? 'கடவுள் துணையிருக்க, விதி என்ன செய்துவிடும்?’ என்று பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்களே?
பாவத்தைக் கரைக்க கடவுள் உதவ மாட்டார். அவருக்கு அதில் பொறுப்பு இல்லை. கடவுள் தன்னிச்சையாகச் செயல்பட மாட்டார். அவரவர் கர்மவினைக்குக் கட்டுப்பட்டு, அதற்கேற்ப உதவியளிப்பார். ஆகவே, 'கடவுளைச் சரணடைந்துவிடு! அவர் எல்லா கர்மவினைகளையும் அழித்துவிடுவார்’ என்பது சிந்தனைக்குப் பொருந்தாத ஒன்று.
ஆபத்பாந்தவன், அனாதரக்ஷகன், கருணைக் கடல் கடவுள்; தான் படைத்த உயிரினங்களைத் துயரத்தில் ஆழ்த்த அவர் விரும்பமாட்டார்; தவம் செய்யாமலும், கர்மவினையைக் கரைக்க முயற்சிக்காமல் இருந்தாலும்கூட, கருணைக்கடலான கடவுள் தாமாகவே முன்வந்து நம் பாவங்களைக் கரைத்துக் கரையேற்றிவிடுவார் எனும் வாதம், நடைமுறைக்குப் பயனளிக்காது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. 'நீ துயரத்தை ஏற்கும் செயலில் தன்னிச்சையாக ஈடுபடுவாய். ஆனால், உன்னைத் துயரம் தொடாமல் காப்பாற்ற, தன்னிச்சையாகக் கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவர் கடவுள்’ என்ற எண்ணம், அறியாமையின் அடையாளம். அவர் அப்படிச் செயல்படுவது உண்மையாக இருந்தால், எந்த உயிரினமும் துயரத்தைச் சந்திக்க வேண்டியது இருக்காது. பெரும்பாலான உயிரினங்கள் துயரத்தை ஏற்று வாடுகின்றன.
சொற்பொழிவில் உதிரும் விளக்கங்கள் எல்லாம், அதைச் செய்பவருக்கு வேலை வாய்ப்பை ஈட்டித் தரும்; கேட்பவரின் துயரத்தை அது துடைக்காது. கேட்டால் மட்டுமே பாவம் தொலையாது. செயல்பட்டுத் தவமிருந்து கரைத்தால் மட்டுமே பாவம் தொலையும். 'உனது செயல்பாட்டில் நீ சேமித்த கர்மவினையை, உனது முயற்சியில் நீதான் அழிக்க வேண்டும்’ என்பது நியதி. இந்த நியதிக்கு மாறான விளக்கங்கள் மனத்துக்குப் பிடித்தமாக இருந்தாலும், விரும்பிய பலன் அவற்றில் இருக்காது.
? எனில், கர்ம வினைகளை அனுபவித்துதான் கரைக்க வேண்டுமா?
ஆமாம்! 'அனுபவிக்காமல் கர்ம வினை கரையாது’ என்கிறது சாஸ்திரம் (நாபுக்தம் க்ஷீயதெ கர்ம கல்ப கோடி சதைரபி). 'தவறான செயலில் ஈடுபட மனம் காரணமானது. தவறு செய்த மனம் தண்டனையை ஏற்கவேண்டும். தவற்றை நினைத்து நினைத்து மனம் நொந்து நொந்து பாவம் கரையவேண்டும்’ என்று சாஸ்திரம் விளக்குகிறது (பச்சாத்தாபம் ப்ராயச்சித்தம்).
'மனத்துடன் இணைந்து ஆன்ம வடிவில் கடவுள் இருக்கிறார். நீ தவறு இழைக்கும்போது, அவர் உன்னைத் தடுக்கவில்லை. நீ கொடை வள்ளலாகச் செயல்படும்போதும் அவர் உன்னைத் தடுக்கவில்லை. அவர் உன்னைத் தூண்டவும் மாட்டார்; தடுக்கவும் மாட்டார். சாட்சியாக எச்சரிக்கையுடன் இருப்பார். அவர் கண்காணிப்பாளர். சிந்தனையைத் திருப்பிவிடமாட்டார். கர்மவினை சிந்தனையைத் தூண்டிவிடும். கர்மவினை தனது விருப்பத்துக்கு உகந்த சிந்தனையை உருவாக்கும். ஆராய்ச்சிகள்,  கர்மவினையின் கோணத்தில் செயல்படும்’ என்றும் சாஸ்திரம் விளக்கும் (புத்தி: கர்மானுஸாரிணீ). ஆக, ஒருவனை அழிக்கவோ, ஆக்கம் கொடுத்து வாழ்த்தவோ இன்னொருவரால் இயலாது. அவனது கர்மவினையானது, அழிவைச் சந்திக்க அல்லது ஆக்கத்தை ஏற்கத் தயாராக இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும் (ஸகர்ம ஸ¨த்ரக்ரதிதோஹிலோக:).
இரண்டாவது கோணம்:
இல்லாத கர்மவினையைக் கற்பனை செய்துகொண்டு, அதற்குப் பெருமை அளித்து, அதை அளிக்கும் முயற்சிகளை எடுத்துக்கூறும் தங்களின் வாதமானது, கனவை நனவாக எண்ணி மகிழும் பாமரர் களை வேண்டுமானால் ஈர்க்கலாம். சிந்தனையாளர்களைச் சீண்டாது. பஞ்சபூதக் கலவையில் உருவான உடலில், சைதன்யத்தின் இணைப்பு காரணமாக மனிதன் உருவாகிறான். சைதன்யம் விடுபட்டதும் உடல் செயலிழந்துவிடும். இதையே பிறப்பு- இறப்பு என்கிறோம். உடலும் உள்ளமும் அழியும்போது, ஒருவனது கர்மவினையும் அழிந்துவிடும். பிறப்பு- இறப்பு இத்துடன் அவன் வாழ்க்கை முடிந்துவிடும். அடுத்த புதுப்பிறவியில் கர்மவினையின் தொடர்பு என்பது, நமது அழகான கற்பனையே!
? அப்படியென்றால், வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளுக் கும், எதிர்பாராத துயரங்களுக்கும் என்ன காரணம்?
மரத்தில் உருப்பெற்ற மாம்பழம் அடுத்த மரத்தின் உற்பத்திக்குக் காரணமாகும். அதை மரமாக வளரச்செய்ய, சுற்றுச்சூழல் காரணம் ஆகிறது. இறந்தபிறகு கர்மவினையின் தொடர்புக்குச் சான்று இல்லை. துயரத்தைச் சந்திக்கும்போது, அதற்கான காரணத்தை ஆராய்ந்து விடைதெரியாமல் விழிபிதுங்கிய வர்கள், கண்ணுக்குப் புலப்படாத- சான்றில்லாத கர்மவினையைக் காரணம் காட்டி ஆராய்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, நிம்மதியானார்கள்.
ஆசைகளை நிறைவேற்றத் துடிக்கும் மனமானது, ஒரு செயலில் ஈடுபடும்போது தோல்வியையும் சந்திக்கும்; வெற்றியையும் சந்திக்கும். அதற்குக் காரணம் மனத்தின் தவறான கணிப்பே என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெளிவாக இருக்கும்போது, இல்லாத கர்மவினையை ஏன் தொடர்பு படுத்தவேண்டும்?
விட்டில்பூச்சி ஒளிப்பிழம்பில் இணைந்து மடிகிறது. மீன் உணவைத் தேடி கிணியில் (தூண்டிலில்) மாட்டிக்கொண்டு மடிகிறது. பாட்டால் ஈர்க்கப் பட்ட மான், வேடனிடம் சிக்கிக்கொள்கிறது. தேன் பருகும் வண்டானது, சூழலை மறந்து தேன் பருகும் வேளையில் பூ மூடிக்கொள்ள, உள்ளே மாட்டிக் கொண்டு மடிகிறது. பறவைகள் வேடன் வலையில் அகப்பட்டு இழப்பைச் சந்திக்கின்றன. கூண்டில் அகப்பட்ட கிளி சுதந்திரத்தை இழக்கும்.சிங்கமும் புலியும் மனிதனுக்கு அடிமையாகி வீரத்தை இழந்து தவிக்கின்றன. இதற்கெல்லாம் அந்தப் பிராணிகளின் அறியாமையே காரணம் என்று தெரிந்துகொள்கிறோம். அதுபோல் மனிதனும் தனது அறியாமையால் சங்கடத்தைச் சந்திக்கிறான், விவேகத்தால் மகிழ்ச்சியை ஏற்கிறான் என்பது நன்றாக விளங்கும்போது, கர்மவினை என்ற ஒரு புதுக் காரணத்தை ஒட்ட வேண்டிய அவலம் முளைக்கவில்லை.
? நவீன விஞ்ஞானமும் 'ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு’ என்றுதானே சொல்கிறது. இதையே நாங்கள் முன்வினை, கர்மவினை என்கிறோம். உங்கள் கருத்துப்படி இந்த வாதமும் தவறு என்று எடுத்துக்கொள்வதா?
சைதன்யம் (உயிர்) வெளியேறிய பிறகு உடலும் உள்ளமும் செயலிழந்துவிடும். அவை இரண்டும் ஜடம்; தனியே இயங்கும் தகுதி இல்லை. உடல் பஞ்ச பூதங்களில் லயித்துவிடும். உள்ளமும் அதோடு மறைந்துவிடும். இந்த நிலையில் உடல்- உள்ளம் இந்த இரண்டாலும் உருவான செயல்பாடு மட்டும் எப்படி மறையாமல் இருக்கும்? அதுவும் மறைந்து போகும். அப்படி மறைந்த கர்மவினையானது, அடுத்த பிறவியில் எப்படித் தொடரும்?
பகுத்தறிவுக்குப் பொருந்தாத வாதம் எல்லோரா லும் ஏற்கப்படும் தகுதியைப் பெறாது. முறுக்குப் பணியாரத்தை ஒரு குச்சியில் கோர்த்து, கடையில் வியாபாரத்துக்காகத் தொங்க விட்டிருப்பார்கள். ஒரு நாள், வேலையாள் ஓடி வந்து, ''ஐயா! கடையில் தொங்கவிட்டிருந்த முறுக்குக் குச்சியை எலி கொண்டு போய்விட்டது. என்ன செய்வது?'' என்று எஜமானனிடம் கேட்டான்.
''குச்சி போனால் போகிறது. நீ முறுக்கை எடுத்து வா!'' என்றான் எஜமானன். குச்சியை எலி இழுத்துச் சென்றால், முறுக்கும் அதோடு சேர்ந்து போயிருக்கும்தானே? முறுக்கை மட்டும் எப்படிக் கொண்டு வர முடியும்?
அதுபோல் உடல்- உள்ளம் ஆகிய இரண்டில் ஒட்டிக்கொண்டிருப்பது கர்மவினை. உடலும் உள்ளமும் அழிந்த பிறகு, கர்மவினை மட்டும் எப்படி மிச்சம் இருக்கும்? சிந்தியுங்கள். கர்மவினை ஒரு விளையாட்டு என்று புலனாகும். பிறக்காத குழந்தைக்குப் பெயர் சூட்டுவதுபோல், இறந்த கர்மவினையை சிரஞ்ஜீவியாக்குவது அறியாமை.
மூன்றாவதாக ஒரு கோணம்...
உதாரணத்தைக் காட்டி, தத்துவ விளக்கத்தைக் கொச்சைப்படுத்துவது பெருமை அல்ல. உதாரணத்தை ஊன்றிக் கவனித்த மனமே, உதாரண வடிவில் தத்துவத்தை வரையறுக்கும். தத்துவத்துக்கு உகந்த உதாரணமா என்பதை ஆராயாமல், அந்த விளக்கத்தில் மயங்கி, தவறான உதாரணத்தின் மூலம் தத்துவத்தின் தரத்தை விபரீதமாக ஏற்றுக்கொண்டுவிடும்.
இப்படியான அறியாமைதான், விழித்துக் கொண்டிருக்கும் மக்களையும் விபரீத முடிவை ஏற்கவைக்கிறது. தகுதி இழந்தவர்களைத் தூக்கிவிட இயலாத நிலையில், தோல்வியைச் சந்தித்தாலும், குறையை வேறோர் இடத்தில் சுமத்தும் அறியாமை இன்றும் விலைபோகிறது.
கண் சிமிட்டுதல், மூச்சு விடுதல், கை-கால்களை அசைத்தல், சிறுநீர், பெருநீர்வெளியேறுதல் ஆகியன, எந்த முயற்சியுமின்றி அனிச்சையாகவே நிறைவேறி விடும். குழந்தை பிறந்ததும் அதற்குத் தாயின் பாலைச் சுவைக்கும் திறமையை யார் கற்றுத் தந்தார்கள்? எல்லாவற்றுக்கும் பூர்வஜன்ம வாசனையே (கர்ம வினை) காரணமாகிறது.
? மனித சிந்தனைகளுக்கும் கர்மவினைதான் காரணமா?
ஆமாம்! மனத்தில் தோன்றிய எண்ணம், மூளையின் ஆணையால் தானாகவே செயல் பட்டு விடும். அந்த ஆணையை, நாம் நமது முயற்சியால் எதிர்க்கவும் முடியும்; ஏற்கவும் முடியும். இந்த இரண்டையும் தவிர்த்தால், ஆணையானது தாமாகவே செயல்பட்டு சுகதுக்கங் களைச் சந்திக்கவைக்கும். நமது சிந்தனையைக் கண்டு கொள்ளாமல், மூளை தன்னிச்சையாகக் கட்டளையிடும் தகுதி எங்கிருந்து வந்தது? இங்குதான் கர்மவினை சுதந்திரமாகச் செயல்பட்டு, தனது பங்கை நிறைவேற்றிக்கொள்கிறது.
? விதிப்படிதான் வாழ்க்கை என்றால் மதியை உபயோகிக்கும் வேலையே இல்லையே?!
அப்படி எடுத்துக்கொள்ளக் கூடாது! இரண்டு விதமான செயல்பாடுகள். ஒன்று, கர்மவினையின் தூண்டுதலில் உருவானது. மற்றொன்று, நமது அறிவாற்றலில் எழுந்தது. அறிவாற்றல் செயல்படாத நிலையில் நிகழும் விளைவுகளுக்குக் கர்மவினையே காரணம் என்பதை மறுக்க இயலாது. நமது கட்டுப்பாட்டுக்கு உட்படாத மூளையின் ஆணைகள் நம்மையும் மீறி சுதந்திரமாகச் செயல்பட்டுவிடும். அந்த ஆணைகள் கர்மவினையின் தூண்டுதலில் உருவானவை. அறிவாற்றலால் அதை எதிர்த்துப் போராடுவதற்கும், தோல்வியைச் சந்திப்பதற்கும் கர்மவினையின் வலுவே காரணம் என்பதைச் சிந்தனையாளர்கள் விளக்கியிருக்கிறார்கள்.
எந்தத் தகுதியும் இல்லாதவன் வாழ்வில் வளம் பெற்று மகிழ்கிறான். மந்திரிப்பதவியில் அமர்த்தப்பட்டு, கௌரவப்படுத்தப்படுகிறான். அறிவாளிகள் குடத்தில் வைத்த விளக்குபோல் ஒடுங்கி வாழ்கிறார்கள். தவறான வழியில் தன்னையும் சமுதாயத்தையும் மாசுபடுத்திக் கொள்பவர்களும் உண்டு. சட்ட திட்டத்துக்கு உட்படாமல், சுயநலத்தை நிறைவுசெய்து, பெருமைப் படுபவர்களும் உண்டு. தவற்றில் மாட்டிக் கொள்ளாமல், பெரிய மனிதனாக நடமாடுபவர்களும் உண்டு.
இன்றையச் சூழலில் தவறு செய்தவன் தப்பிவிடுவதும், செய்யாதவன் மாட்டிக் கொள்ளுவதும் உண்டு. காட்டில் விலங்கினங் களுடன் இணைந்து வாழ்கிறான். நாட்டில் பாம்பு தீண்டி மடிகிறான். இங்கெல்லாம் வெற்றி- தோல்விகளுக்கு எதைக் காரணம் காட்ட இயலும்? அவரவர் தத்தமது கர்மவினைக்கு உட்பட்டே வாழ்கிறார்கள். கர்மவினையின் மாறுபாடு சுக- துக்கங்களுக்கு வழிவகுத்தது.
? எல்லாம் சரி! வாழ்க்கைச் சுழற்சி முற்றுப்பெற்ற பிறகும் வினைகள் தொடரும் என்பதை ஏற்கமுடியவில்லையே?!
பகலில் இருக்கும் வெப்பம், ஆதவன் மறைந்த பிறகும் அனுபவத்துக்கு வரும். பனிப் பொழுதின் தாக்கம், ஆதவன் தென்பட்ட பிறகும் தொடர்வது உண்டு. மழை விட்டாலும் தூவானம் தொடரும். பெருங்காயம் காலியானாலும், சொப்பில் அதன் வாசனை தொடரும்.வெந்நீர் கொதித்த பிறகு, அடுப்பு அணைந்தாலும், வெப்பம் நீரில் தொடரும். காரணம் மறைந்தாலும், அதன் விளைவு மறையாது.
உடலிலிருந்து வெளியேறிய ஜீவாத்மா மற்றுமொரு உடலில் நுழையும்போது, கர்மவினை யோடு இணைந்து நுழையும். விடுபட்ட ஜீவாத்மாவோடு அவன் ஆற்றிய அறமும் பின்தொடர்ந்து செல்லும் என்று சொல்லுவார்கள் (தர்ம:ஸகாபரமஹோபர லோகயானே). எல்லா வற்றையும் துறந்து செல்லும் ஜீவாத்மாவை, அவன் செய்த அறம் (கர்மவினை) பின்தொடரும் என்கிறது சாஸ்திரம் (தர்மஸ்தமனுகச்சதி). ஆயிரக்கணக்கான மாடுகள் இருக்கும் மந்தையில் கன்று தனது தாயை அடையாளம் கண்டு இணைவது போல், ஜீவாத்மாவை அடையாளம் கண்டு அவனது கர்மவினை இணைந்துவிடும்.
கர்ம சித்தாந்தத்தின் அடித்தளத்தில் உருவான சாஸ்திரங்கள் ஏராளம். கர்மவினையின் விளையாட்டை எடுத்துரைக்க வந்தது ஜோதிடம். கர்மவினை கரைந்தால் மட்டுமே மோட்சம் உண்டு என்கிறது ஆன்மிகம். கர்மவினை பிணியாக மாறி துன்பத்தை விளைவிக்கிறது என்கிறது கர்மவிபாகம். ஒரு தாய்க்குப் பிறந்த பிள்ளைகளில் நால்வரில் ஒருவன் அறிவாளி, மற்றொருவன் முட்டாள், வேறொருவன் திருடன், மற்றுமொருவன் சோம்பேறி - இப்படி ஏற்பட, கர்மவினையே காரணமாகிறது. வாழ்க்கை வளமாகவும் வளம் குன்றியும் தென்பட கர்மவினைக்குப் பங்கு உண்டு.
தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...
மனிதர்கள் ஓர் இனம். ஆனால், ஒவ்வொருவரது இயல்பும் மாறுபட்டுக் காணப்படுகிறது. சிந்தனை மாற்றம் தெரிகிறது. இதில் ஏழை, பணக்காரர்கள், பண்டிதன், பாமரன் - இப்படிப் பல மாற்றங்கள் தென்படுவது ஏன்?
ஏழையைப் பணக்காரனாக்கவும், பாமரனைப் பண்டிதனாக்கவும் அளவுகடந்த முயற்சி எடுக்கப்படுகிறது. ஆனாலும், அதில் வெற்றி பெற இயலவில்லை. கல்விக் கூடங்கள் பல வழிகளில் செயல்பட்டும் கல்வி அற்றவர்கள் ஏன் தென்படுகிறார்கள்? பொருளாதார வளர்ச்சியில், ஏழ்மையை அகற்றப் பல வழிகளில் செயல்பட்டும் தோல்வியைச் சந்திப்பது ஏன்? ஏழைகள் எண்ணிக்கையில் பெருகி வருகிறார்களே! கர்மவினையை எதிர்த்துப் போராடினாலும், அதனை வீழ்த்த, செயலிழக்கச் செய்ய நம்மால் இயலவில்லை. பிரளயம் வரும்வரை ஏழையும் இருப்பான், பணக்காரனும் இருப்பான். ஒடுக்கப் பட்டவனும் இருப்பான், ஒடுக்குபவனும் இருப்பான். அவர்களது கர்மவினையை நம்மால் மாற்ற இயலாது. நாடகம் ஆடுகிறோம்.

Share/Bookmark

கர்மவினை