மீனாட்சி கோயிலில் ‘புராண நிகழ்வாக’ பொற்றாமரை குளக்கரையில் உயிர் விட்ட நாரை
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ‘நாரைக்கு முக்தி தரும் புராண நிகழ்வை’ முன்னிறுத்தும் வகையில், பொற்றாமரைக் குளக்கரையில் காத்திருந்த நாரை உயிர்விட்ட சம்பவம் பக்தர்களை பெரும் பரவசத்திற்கு ஆளாக்கியுள்ளது. முற்காலத்தில் பாண்டிய நாட்டு தென்பகுதியில் ஒரு குளத்தில் வாழ்ந்த மீன்களை உண்டு, நாரை ஒன்று வாழ்ந்தது. வறட்சியால் குளம் வற்றிப்போக, உணவின்றி தவித்த நாரை அங்கிருந்து, காட்டுப்பகுதியில் இருந்த ஒரு குளத்தை நோக்கிச் சென்றது. தவமிருந்த முனிவர்கள் அக்குளத்தில் நீராடியதைக் கண்டது. அவர்கள் மீது, மீன்கள் தவழ்ந்ததை பார்த்தது. அந்த மீன்களை உண்பது பாவமென கருதி நின்றிருந்தது. அப்போது சத்தியன் என்றொரு முனிவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பெருமையை சக முனிவர்களிடம் பேசியது கேட்டது. எனவே அங்கிருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வந்து, அங்கிருந்த பொற்றாமரைக் குளத்தை அடைந்தது.
கோயில் குளத்து மீன்களை உண்பது பாவமென்பதால், சுந்தர விமானத்தையே சுற்றி சுற்றிப் பறந்தது. மீன்களை உண்ணாமலேயே 15 நாட்களாக அக்குள பகுதியிலேயே தங்கி இருந்தது. இதனை கண்ட சுந்தரேஸ்வரர் பெருமான் நாரை முன் தோன்றி, ‘என்ன வரம் வேண்டும்’ என்று கேட்டார். ‘எங்கள் இனத்தவர்கள் மீன்களை உண்டு வாழும் சுவாபம் கொண்டவர்கள். இப்புண்ணியக் குளத்தில் அதைச் செய்யாமல் இருக்க இங்கு மீன்களே இல்லாத நிலையும், எனக்கு சிவலோகம் தங்கும் பாக்கியமும் தந்தருளுங்கள்’ என்றதாம் நாரை. இதன்படியே, சுந்தரேஸ்வரர் நாரைக்கு முக்தி அளித்ததாக திருவிளையாடல் புராணம் பேசுகிறது. மீனாட்சி கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் ஆவணி மூலத்திருவிழாவில் சுந்தரேசுவரர் நாரைக்கு முக்தி அளிக்கும் லீலை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
இந்த புராண வரலாற்றை நினைவுறுத்தும் வகையில் கடந்த 5நாட்களுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரை குளத்தைத் தேடி ஒரு நாரை வந்து தங்கி இருந்தது. இதனை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஒவ்வொரு நாளும் ஆச்சர்யத்துடன் கண்டு களித்து, வந்தனர். வெயிலில் நாரை நிற்பதைக் கண்ட பக்தர் ஒருவரும், இந்த நாரைக்கென ஒரு குடையை குளக்கரை ஓரத்தில் கட்டி வைத்தார். மீனாட்சிகோயில் குளத்தில் மீன்கள் எதையுமே தேடாமல் பட்டினியாக நான்கைந்து நாட்களை இந்த குடை நிழலில் கழித்த நாரை, நேற்று மாலையில், திருவிளையாடல் புராணத்தை நினைவுறுத்தும் விதமாக முடிவாக இறந்து போனது. கோயில் நிர்வாகம் சார்பில் இந்த நாரை நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. உலகப்புகழ்மிகு மீனாட்சியம்மன் கோயிலில் புராண நிகழ்வு, நேரடி நிகழ்வாக நடந்திருப்பது பக்தர்களை பெரும் பரவசத்திற்கு ஆளாக்கி இருக்கிறது
.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment