ப்பில்லா சிவனருளைப் பரிபூரணமாகத் தன்னுள் அடக்கி, உலகம் செழிக்க உன்னதமான பலன்களை அள்ளி வழங்கும் அற்புதம்தான் திருவம்பலச் சக்கரம்.
திருமூலர் அருளிய இந்த சக்கரத்தை, 'சித்துக்கள் ஆடுகின்ற சிதம்பரச் சக்கரம்’ என்று ஞானியர் பலரும் போற்றியுள்ளார்கள். சிவ அனுக்கிரகம் பெற்ற பெரியோர்களை அணுகி, பெருமானின் மகா மூல மந்திர தத்துவங்கள் அடங்கிய இந்த சக்கரத்தை முறையாக எழுதி வாங்கி, உரிய தீட்சை முறையை எளிய வகையில் உபதேசமாகப் பெற்று ஜபம் செய்து வந்தால், அனைத்துச் செயல்களிலும் வெற்றி வந்து சேரும் என்கிறது சிவபூஜா ரகஸ்யம்.
இந்த சக்கரத்தில், சிவனாரே அருளிய சிவசிந்தாமணி மூல மந்திரமும் அடங்கியுள்ளது என்பது கூடுதல் சிறப்பு! சிவபெரு மானைப் புகழும் சமக மந்திரம், 'பஞ்சாட்சர மூலம் அடங்கிய திருவம்பலச் சக்கரத்தில் உள்ள சிவாய நம என்ற எழுத்துக்களைக் கோர்வை செய்து ஜபிப்பவர்களுக்கும், பூஜிப்பவர்களுக்கும் நலம் பல விளையும்’ என்று விவரிக்கிறது.
சக்தி வாய்ந்த இந்த சக்கரத்தை ஜபயோக கர்ம விதியின்படி சிவ தீட்சை பெற்று, ஒரு லட்சம் முறை நம்பிக்கையோடு ஜபித்து வழிபட ஸித்திகள் பலவும் கிடைக்கும்.
அம்பலச்சக்கர பூஜை முறை:
பொதுவாக சித்தர்களின் போதனா முறையைப் பின்பற்றுபவர்கள், தமிழ் மறைப் பாடல்களை பாடும் முற்றோதுதல் வழிபாட்டைக் கடைப்பிடிக்கின்றனர். சிவாகம விதியைப் பின்பற்றுபவர்கள், ஆகம பூஜா விதிகளை வீட்டில் கடைப்பிடித்துச் செய்வதே முறையான வழிபாடாக அமைகிறது. பொது இடத்தில் வழிபாடு நடத்துபவர்கள் முற்றோதுதல் முறையையும், தனிப்பட்ட முறையில் குடும்ப நலனுக்காக செய்பவர்கள், ஆகம பூஜையையும் செய்யலாம். குடும்பத்தில் உள்ளவர்கள் அனுதினமும் எளிய வகையில் செய்தால் போதுமானது.
தங்கம், வெள்ளி அல்லது தாமிரத் தகட்டில், இந்தச் சக்கரத்தை எந்தவித பின்னமும் ஏற்படாமல் கவனமாக எழுதி எழுத்தாணியால் வரைந்து கொள்ளவும். (சிவ அனுக்கிரகம் பெற்ற பெரியோர்களை அணுகி, உரிய முறைப்படி வரைந்து வாங்குவது சிறப்பு). பின்னர், குங்குமப்பூ, ஜவ்வாது, கோரோசணை, புனுகு, அத்தர் ஆகியவற்றை நெய் கலந்து பூசி, ஒரு தட்டில் வெண்பட்டு விரித்து அதன் மேல் தகட்டை வைத்து, சந்தன- குங்குமம் வைத்து பூஜை அறையில் இடம்பெறச் செய்யலாம்.
சிவராத்திரி, சோமவாரம் முதலான சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் பூஜிக்கத் துவங்குவது சிறப்பு.
முதலில் விநாயகரை வழிபட்டு வணங்கவேண்டும். பின்னர் சிவபெருமானை மனத்தால் தியானித்து வணங்கி, கீழ்க்காணும் சிவநாமங்களைக் கூறி, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து திருவம்பலச் சக்கரத்தை வழிபடலாம்.
ஓம் பவாய நம:
ஓம் ருத்ராய நம:
ஓம் ம்ருடாய நம:
ஓம் ஈசானாய நம:
ஓம் சம்பவே நம:
ஓம் சர்வாய நம:
ஓம் ஸ்தானவே நம:
ஓம் உக்ராய நம:
ஓம் பர்காய நம:
ஓம் பரமேஸ்வராய நம:
ஓம் மகாதேவாய நம
வில்வத்தால் அர்ச்சித்து வழிபட்ட பிறகு, அஷ்டாங்க நமஸ்காரம் செய்து கற்பூர ஆரத்தி செய்ய வேண்டும். நெய் இட்ட சாதத்தை நிவேதனம் செய்து, தேங்காய், பழம், தாம்பூலம் வைத்து வணங்கவும். எளிய முறையில் வழிபடுவோர் பூஜையின்போது கீழ்க்காணும் காயத்ரீ மந்திரம் மற்றும் துதிப்பாடலைப் படித்து வழிபட்டும் பலன் பெறலாம்.
காயத்ரீ
ஓம் தன்மஹேசாய வித்மஹே வாக்விசுத்தாய தீமஹி.
தந்தோ சிவ: ப்ரசோதயாத்
துதிப்பாடல்...
கங்கைவார் சடையாய் கணநாதா
காலகாலனே காமனுக்குக் கனலே
பொங்குமால் கடல்விடம் இடற்றானே
பூதநாதனே புண்ணியா புனிதா
செங்கண்மால் விடையாய்த் தெளிதேனே
தீர்த்தனே திருவாவடுதுறையுள்
அங்கணா எனை அஞ்சேல் என்று அருளாய்
ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே!
எல்லோரும் திருவம்பலச் சக்கரத்தை வீட்டில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கென சொல்லப்பட்ட எளிய கட்டுப் பாட்டு  முறைகளைக் கையாள வேண்டும். லாகிரி- புகையிலை வஸ்துகளை பயன்படுத்தாமை, தெய்வ நிந்தையை தவிர்ப்பது, புலன் அடக்கம் ஆகியவை அவசியம்.
                                                                                                        - வழிபடுவோம்

Share/Bookmark

வீட்டிலேயே செய்ய சின்னச் சின்ன வழிபாடுகள் - திருவம்பலச் சக்கரம்