கல்வெட்டு
தஞ்சை பெரிய கோவில் ஆகம முறைப்படி கட்டப்பட்டிருப்பதை, 'தஞ்சாவூர்' என்ற கல்வெட்டு ஆராய்ச்சி நுாலில், 'மகுடாகமம் எனும் ஆகம நெறியிலும், மகா சாயிகா பதம் என்ற பத-விந்நியாச அடிப்படையிலும் எழுப்பப்பட்டதே ராஜராஜேச்சரம்' என்று பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் குறிப்பிடப்பட்டு உள்ள மகா சாயிகா பதம் என்பது, கோவில் கட்டப்படும் முன், அதற்கான மனையை பிரித்து அளவிடும் முறைகளில் ஒன்று.
இந்த முறை, ஆகமத்தில் இருக்கிறது. விஜயநகர ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட, ப்ருஹதீஸ்வர மஹாத்மியம் என்ற நூலில், இது பற்றிய சமஸ்கிருத குறிப்பு உள்ளது. இதுவும், பெரிய கோவிலுக்கும் மகுடாகமத்திற்கும் உள்ள தொடர்பை ஊர்ஜிதம் செய்கிறது. சரபோஜி மன்னரின் காலத்தில் எழுதப்பட்ட பெருவுடையார் உலா எனும் நுாலும்,
'ஆதிசைவர் நீடு மகுடாகமத்தில் ஆட்டத்தில்
ஓதிசைவில் செய்பூசை உட்கொண்டு'
என்ற வரிகளின் மூலம், இதை உறுதி செய்கிறது.
மகுடாகமம், 28 சைவ ஆகமங்களில், 17வது ஆகமமாகும். 'மகுடம் மகுடம் தந்த்ரம் அங்க-ப்ரத்யங்கம் ஏவ ச' என்ற மகுடாகம வசனத்தை அறிந்து, சைவ ஆகமங்களையே தன் வடிவாகக் கொண்ட சிவபெருமானின் தலையான, மகுடாகம முறைப்படியே, சிவபெருமானுக்குத் தலைசிறந்த கோவிலை எழுப்ப வேண்டும் - என்பதை, ராஜராஜ சோழன் கருதியிருக்கிறார்.
வேற்று மந்திரங்கள்
தற்போது சிலர் மிக சாமர்த்தியமாகக் கேட்பதாக எண்ணி, 'ஆகமங்களில் வேற்று மந்திரங்களை சொல்லக்கூடாது என்று எங்கேனும் உள்ளதா?' என்று கேட்கின்றனர்.'தமிழில் மொழிபெயர்த்து குரானை ஓதக்கூடாது என்று சொல்லி இருக்கிறதா?' என்பது போன்ற, முட்டாள்தனமான கேள்வி தான் மேற்படி கேள்வியும். ஆகமங்கள் போன்ற வழிபாட்டு நெறி நுால்களில், என்ன செய்ய வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டு இருக்கும்.
ஆகமங்களில் மந்த்ர உத்தாரபடலம் என்ற பகுதியில், எந்தெந்த மந்த்ரங்களைச் சொல்லி வழிபட வேண்டும் என்று ஒரு பெரும் பட்டியல் இருக்கும். அந்த மந்திரங்களைச் சொல்லி தான் பூஜிக்க வேண்டும் என்பது, அந்த ஆகமத்தின் கட்டளை.வேற்று மந்திரங்கள் வடமொழியில் இருந்தாலும், அவற்றைச் சொல்லக் கூடாது என்பது தான் ஆகமங்களின் கருத்தாகும்.
அவ்வாறு சொன்னால் அது மந்திரக் கலப்பு. அப்படிப்பட்ட கலப்பு தவறு என்று,
'சிவ சித்தாந்த தந்த்ரேன ஆரப்தம் கர்ஷணாதிகம்|
ந குர்யாத் அன்யதந்த்ரேண குர்யாத் சேத் கர்த்ரு நாசனம்'
என்ற மேற்கண்ட வரிகள் வாயிலாக ஆகமங்கள் தெரிவிக்கின்றன.
ஆதீனங்களின் தீர்மானம்
இதுவரை ஆகமங்களின் முக்கியத்துவத்திற்கான சான்றுகளாக நாம் பார்த்தவை, 800 ஆண்டு களுக்கு மேல் பழமை வாய்ந்தவை. அவற்றில் பெரும்பாலான சான்றுகள் தமிழ் மொழியில் உள்ளன. இருப்பினும் தற்போது, உண்மையை மறைத்தும் திரித்தும் பேசும் பொய்யர்களுக்கும், பிற மதத்தவர்களுக்கும், நம் செந்தமிழ் வைதிக சைவ முறை விளங்காது என்பதை,
'கையில் உண்ணும் கையரும் கடுக்கடின் கழுக்களும்
மெய்யைப் போர்க்கும் பொய்யரும் வேத நெறியை அறிகிலார்'
என்ற ஆனைக்கா பதிகம் உணர்த்துகிறது.அவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், சைவர்களும் அவ்வாறு இருக்கலாமா?
கடந்த, 2002 அக்டோபர், 21 மற்றும் 22ம் தேதி, தருமை ஆதீனத்தின் அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனமும் தமிழ்நாடு அர்ச்சகர்களின் ஆகம வல்லுனர் குழுவும் இணைந்து நடத்திய கருத்தரங்கில், 'ஆகம முறைப்படி அமைந்த திருக்கோவில்களில் ஆகம முறைப் படியே பூஜித்தல் வேண்டும்' என்பது தான், முதல் தீர்மானமாக இருந்தது. இதில், 15 சைவ ஆதீன குருமகா சன்னிதானங்கள் கையொப்பமிட்டு உள்ளனர். அதுவும், கருத்தரங்கில் பங்கேற்ற தமிழ் அறிஞர்கள் மற்றும் சிவாச்சாரிய பெருமக்கள் முன்னிலையில்!
இந்த நிலையில், மகுடாகம முறைப்படி எழுப்பப்பட்ட தஞ்சை பெரிய கோவிலில், வேதாகம முறையை புறந்தள்ளிவிட்டு, அடிப்படை ஆதாரமற்ற புதிய முறையில் குடமுழுக்கு நடத்துவது சரிதானா என்று, கையொப்பமிட்ட அனைவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். இது, சைவ சமயத்திற்கு செய்யும் பெரும் துரோகம் அல்லவா!
-முனைவர் ஸே.அருணஸுந்தர சிவாச்சார்யர்
-மெட்ராஸ் சமஸ்கிருத கல்லுாரி ஆசிரியர்
சட்டத்தின் நிலைப்பாடு
தஞ்சை பெரியகோவிலில் தமிழ் முறைப்படி குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று கோரும் சிலர், அதற்காக முன் வைக்கும் வாதங்கள்:
* பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜன் தமிழ் முறைப்படித் தான் கோவிலை கட்டினார்
* முதல் குடமுழுக்கும், அதன் பின் பல நுாற்றாண்டுகளாக தமிழ் முறைப்படி தான் அர்ச்சனைகள், பூஜைகள் முதலியன நடைபெற்று வந்தன
* பெரிய கோவில் கல்வெட்டுகள், தமிழ் முறைப்படி பூஜைகள் நடைபெற்று வந்தமையை ஆவணப்படுத்தியுள்ளன. இவை மூன்றுமே பொய்யான வாதங்கள். அவற்றிற்கான எந்த ஆதாரத்தையும், இவர்களால் காட்ட முடியவில்லை. இவர்களிடம் எந்தப் புராதன தமிழ் மந்திரங்களும், தமிழ் ஆகமங்களும் இல்லை.இவர்களாக தற்போது இட்டுக் கட்டிய வசனங்களும், அவர்களாக சுயமாக தொகுத்த பாடல்களுமே உள்ளன.
இவ்வாறு செய்யலாம் என, ஒரே ஒரு மகான் கூட அனுமதி கொடுக்கவில்லை. இவையெல்லாம் பக்தர்களை ஏமாற்றும் செயல்கள்.மேலும், தமிழ்நாடு கோவில் நுழைவுச் சட்டம் விதிகள், 8 மற்றும் 9ன் படி, 1947ம் ஆண்டு கோவில்களில் என்ன பூஜை முறைகள் இருந்தனவோ, அவற்றை மாற்றி அமைக்கவோ, கூட்டவோ, குறைக்கவோ, புதிதாக ஒன்றைச் சேர்க்கவோ இயலாது.
கடந்த, 1991ம் ஆண்டு, மத்திய அரசு கொண்டு வந்த வழிபாட்டுத் தலங்கள் சட்டம், பிரிவுகள் 3 மற்றும் 4ன் படி, 15.08.1947 அன்று ஒரு வழிபாட்டுத் தலத்தில் எந்த சம்பிரதாயம் பின்பற்றி வரப்பட்டதோ அதை மாற்ற, நீதிமன்றம் உள்ளிட்ட எவருக்கும், அதிகாரம் கிடையாது. அவ்வாறு மாற்றினால், பிரிவு 6ன் கீழ் மூன்று ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.
சமீபத்தில் வந்த உச்ச நீதிமன்றத்தின் அயோத்தி வழக்கு அமர்வு, இதை விரிவாக தெளிவுபடுத்தி உள்ளது. புதிது புதிதாக மத விஷயங்களிலும், வழிபாட்டு முறைகளிலும் பிரச்னைகளை உருவாக்கி நீதிமன்றம் செல்வதை, இந்த சட்டம் உறுதியாக தடை செய்கிறது.
ஆகவே, தமிழ்நாடு கோவில் நுழைவு சட்டப்படியும், மத்திய வழிபாட்டுத் தலங்கள் சட்டப்படியும், அந்த சட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வின் ஆணித்தரமான தீர்ப்பின் படியும்; ஆதிசைவ தமிழர்களின் பழைய வழிபாட்டு முறையை அழிப்பதையே குறியாக கொண்டிருக்கும், நாத்திகர்களும், முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும், பிறரும் சேர்ந்து உருவாக்கியுள்ள (மேலே நோட்டீசை பார்க்கவும்) தமிழின் வேடம் பூண்ட, 'புதிய முறை குடமுழுக்கு' நிராகரிக்கத்தக்கது.
பெயரும், ஆகமமும்!
தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகளில், அங்கு தொண்டு செய்தவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அவற்றில் சில:சதாசிவன், ஞானசிவன், மனோன்மசிவன், பூர்வசிவன், தர்மசிவன், கவசசிவன், சத்யசிவன், வாமசிவன், நேத்ரசிவன், ஓங்காரசிவன்.ஏன் எல்லா பெயர்களும், 'சிவன்' என்றே முடிவுறுகின்றன என்ற கேள்விக்கு, வேதசிவாகமங்களை ஒழித்து, உலகின் வேறு எந்த நுால்களிலிருந்தும் பதிலை பெற முடியாது.
இறைவனுக்கு பணிவிடை செய்ய வேண்டுமென்றால், சைவ ஆகமங்களின்படி தீக்ஷை பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த தீக்ஷை சடங்கின் போது, வேள்விச்சாலையின் மையத்தில் மண்டலம் அமைக்கப்பட்டு, அதில் ஐந்து ஆவரணங்களோடு பரமேச்வரன் பூஜிக்கப்படுகிறார்.
தீக்ஷை பெற்றுக் கொள்ளும் சிஷ்யனாகிய சிவனடியார், கண் மூடிய நிலையில், அந்த மண்டலத்தில் மலரிடுவார். அம்மலரானது மண்டலத்தில் உள்ள எந்த தெய்வத்தின் மீது விழுகிறதோ, அதற்கு தகுந்தாற்போல, சிவனடியாருக்கு தீக்ஷை நாமம் சூட்டப்படும்.மையத்தில் சிவபெருமான் மீது மலர் விழுந்தால் சதாசிவன் என்றும், ராஜராஜ என்ற பெயருடைய, அருண்மொழித் தேவனாகிய, குபேரனின் மீது மலர் விழுந்தால், ராஜராஜ தேவன் என்றும், ஞானம், தர்மம் என்ற சிங்கங்களின் மேல் விழுந்தால், ஞானசிவன், தர்மசிவன் என்றும், தீக்ஷை நாமங்கள் சூட்டப்படும்.
க்ஷத்ரியர்களுக்கு தீக்ஷை செய்யும்போது, 'தேவ' என்று முடிய வேண்டும் என்பது, ஆகம விதி. இப்படி சூட்டப்பட்ட பெயர்களே, கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.இவற்றையெல்லாம் மூலசிவாகம நுால்களிலிருந்தும், 14ம் நுாற்றாண்டை சார்ந்த, சிவபூஜாஸ்தவம் எனும் நுாலின் உரையிலிருந்தும், அகோர சிவாச்சார்ய பத்ததியின், 'ப்ரபா' என்ற உரையில் இருந்தும் அறியலாம். எனவே, தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கும், வேத சிவாகமங்களுக்கும் உள்ள தொடர்பை, யாரும், என்றும் மறுக்க முடியாது.
No comments :
Post a Comment