கல்லீரல்






நம் உடலில் உள்ள கல்லீரல் என்பது நம் வீட்டிலுள்ள அம்மாவைப் போல். எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்யும். வீட்டில் அம்மா உடம்பு சரியில்லாமல் படுத்துக் கொண்டால்தான் நமக்கு அம்மாவின் அருமையே தெரியும்.
அதேபோலத்தான், கல்லீரலுக்கு அளவுக்கு அதிகமாய் வேலை கொடுத்தால், சீக்கிரம் சோர்ந்து விடும். இது மொத்த உடலையே பாதிக்கும். ஏனெனில் நம் உடலில் மொத்த இயக்கங்களும், தேவையான எனர்ஜியையும் சத்துக்களையும்,கல்லீரலிடமிருந்துதான் பெறுகிறது.
உணவினை ஜீரணப்படுத்தி, சத்துக்களை பிரித்தெடுத்து, எல்லா பாகங்களுக்கும் அனுப்புகிறது.அதுமட்டுமில்லாமல், வேண்டாத கழிவுகளையும் வெளியேற்றும் பொறுப்பும் கல்லீரலுக்கு உண்டு.
அளவுக்கு அதிகமான உணவுகளை, எளிதில் ஜீரணமாகாத கொழுப்பு உணவுகளை எல்லாம் இஷ்டப்படி சாப்பிட்டு கல்லீரலுக்கு வேலைகள் கொடுத்துக் கொண்டே இருந்தால் அது சோர்ந்து போகத்தானே செய்யும்.
அதன் வேலையை நாம் பாதியாக்க, அளவான உணவு உண்டால் போதும். மேலும் கல்லீரலை நாம் சாப்பிடும் சில உணவுகள் கூட சுத்தப்படுத்தும். இதனால் கல்லீரலின் வேலை பாதியாய் குறையும். கல்லீரலின் வேலையை மகிழ்ச்சியாய் தொடர நாம் உதவுவோமே.
கேரட் பீட்ரூட் :
க்ளுடோதயோன் என்கின்ற முக்கியமான புரோட்டின் கல்லீரலில் தங்கி இருக்கும் நச்சுக்களை அகற்றிவிடும் தன்மை கொண்டது. கேரட்டில் இந்த புரோட்டின் முழுக்க முழுக்க உள்ளது என்பது தெரியுமா?
அதுமட்டுமில்லாமல் பீட்டா கரோட்டின், .ஃப்ளேவினாய்டு ஆகியவைகள் பீட்ரூட்டிலும் கேரட்டிலும் உள்ளன. இவை இரண்டும் கல்லீரலின் செயல்திறனை அதிகப்படுத்தும்.
ஆகவே இவ்விரண்டு காய்கறிகளையும் வாரம் தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
கீரை வகைகள் :
நாம் நிறைய கெமிக்கல் கலந்த உணவுகளை கடைகளில் வாங்கி சாப்பிடுகிறோம்.ஜங்க் வகை உணவுகளை போட்டி போட்டுக் கொண்டு சாப்பிட்டு, வயிற்றினை சங்கடத்திற்கு ஆளாக்கி விட்டுவிடுகிறோம்.
இந்த கீரை உணவுகளை தினமும் சாப்பிட்டால் கீரையில் உள்ள சில க்ளோரோஃபில் நச்சுக்களை உட்கிரகித்து வெளியேற்றுகிறது.
முட்டை கோஸ் :
பச்சை நிறத்திலிருக்கும் முட்டைகோஸ் கல்லீரலை நச்சுக்களிலிருந்து பாதுகாக்கும் வேலையை செய்கிறது. அதில் அதிக அளவு சல்ஃபர் உள்ளது.
அது கல்லீரலில் உள்ள என்சைம்களை சுரக்க ஊக்குவிக்கிறது. இதனால் கல்லீரல் பலம் பெற்று தன் வேலையை செய்யும். கல்லீரலுக்குள் செல்லும் ஆபத்து நிறைந்த நச்சுக்களை வெளியேற்றும்.
க்ரேப் ஃப்ரூட் :
க்ரேப் ஃப்ரூட் கல்லீரலின் செயல்கள் நன்றாக நடக்க உதவி புரிகிறது. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். அதில், விட்டமின் சி,ஆன்டி ஆக்ஸிடென்ட், மற்றும் க்ளுடாதயோன் ஆகியவைகள் உள்ளது. அவை உடலிள்ள நச்சுக்களை அகற்றி , கிருமிகளுக்கு எதிராக செயல் புரியும்.
ஆப்பிள் :
கல்லீரலின் வேலையை பாதியாய் குறைக்கும் சக்தி ஆப்பிளிடம் உள்ளது. இதிலுள்ள சில சத்துக்கள், கல்லீரலை சுத்தப்படுத்துகிறது.அதுக்கு வலுவூட்டி அதன் வேலையை தெம்பாய் செய்யச் உதவுகிறது.
பூண்டு :
கல்லீரலை சுத்தப்படுத்த மிகவும் சிறந்தது பூண்டு. இதிலுள்ள அலிசின் மற்றும் செலினியம் ஆகியவை இரண்டுமே கேன்ஸர் செல்களை எதிர்த்து போராடும். ஆகவே கல்லீரலில் ஏற்படும் பாதிப்பினை சீர் செய்ய பூண்டு மிகவும் தேவையானதாகும்.
வால்நட் :
உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள், க்ளுடோதயோன், ஒமேகா 3 ஃபேட்டி ஆஸிட் ஆகிய எல்லா சத்துக்களுமே வால் நட்டில் உள்ளன. இது கல்லீரலின் என்சைம்களை தூண்டி, ஜீரண வேலைகளை துரிதப்படுத்துகிறது.
மேலே கூறிய அனைத்து உணவுப் பொருட்களுமே கல்லீரலை சுத்தப்படுத்தி அதனை எப்போதுமே உற்சாகமாய் வைத்துக் கொள்ளும். கல்லீரல் உற்சாகமாய் இருந்தால்தான், இதயமும் மூளையும் உற்சாகமாய் இருக்கும்.
இவை நன்றாய் இருந்தால்தான் நம் மனம் உற்சாகமாய் இருக்கும். நாம் நன்றாக இருந்தால்,நம்மை சுற்றி உள்ளவர்களும் நன்றாக இருப்பார்கள். ஆகவே நல்லதையே உண்ணுங்கள். நல்லதையே எண்ணுங்கள்.

No comments :

No comments :

Post a Comment