பொதுவா இயற்கை விவசாயத்துல மகசூல் குறையும்னுதான் எல்லாரும் நினைக்கிறாங்க. ஆனா, அது உண்மையில்லை. ரசாயனத்துல இருந்து திடீர்னு இயற்கைக்கு மாறும்போது மகசூல் குறையலாம். ஆனா, போகப்போக இயற்கை விவசாயத்துல செலவே இல்லாம, ரசாயனத்துக்கு ஈடா கண்டிப்பா மகசூல் கிடைக்கும். இதுக்கு நானே உதாரணம்' என்று 'ஜீரோ பட்ஜெட்’ விவசாய முறை பற்றி சிலாகிக்கிறார், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த லோகநாதன்.
சுற்றுச்சூழல் பாதிப்பைப் பற்றி வாய்கிழியப் பேசுபவர்கள் எல்லாம், வாகனங்கள் மூலமாக காற்று மண்டலத்தைக் காயப்படுத்திக் கொண்டு இருக்கும்போது, சூழல் நலனைக் கருத்தில் கொண்டு குதிரை வண்டியில்தான் பயணம் செய்து வருகிறார், இந்த சூழலியலாளர் லோகநாதன். சின்னியம்பாளையத்தில் உள்ள அவருடைய பண்ணையில் லோகநாதனைச் சந்தித்தோம்.
விட்டு விட்டுப் பெய்யும் தூறல்மழை... வானம் வெளி வாங்கக் காத்திருக்கும் மேய்ச்சல் ஆடுகள்... தொழுவத்தில் தலைசிலிர்க்கும் நாட்டுமாடுகள்... வெதுவெதுப்பைத்தேடி அலையும் கோழிக்குஞ்சுகள்... அசைபோடும் ஆசைக் குதிரைகள்... என ஒருங்கிணைந்து கிடக்கிறது, இவருடைய ஐந்து ஏக்கர் பண்ணை. ஒற்றைக்குதிரை வண்டியில் வலம் வந்த லோகநாதன், அதை உரிய இடம் சேர்த்துவிட்டு நம்மிடம் பேச ஆரம்பித்தார்.
''30 கிலோ மீட்டர் சுத்தளவுக்கு எந்த ஜோலியா இருந்தாலும், எரிபொருள் போடக்கூடிய வாகனங்களைப் பயன் படுத்துறதில்லீங்க. குதிரை வண்டி சவாரிதான். எங்க வீட்டு குழந்தைங்க இதுல தான் பள்ளிக்கூடம் போறாங்க. டவுன் வீதியில ஓட்டிட்டுப் போறப்போ ஆச்சர்யமா பார்ப்பாங்க. வாகனப் புகையால ஏற்படுகிற சுற்றுசூழல் மாசை இந்த குதிரை வண்டி சவாரி ஒரளவு குறைக்கிறதுங்கிறதுல எனக்கு பரமதிருப்தி' எனும் லோகநாதன், சவாரிக்கு மட்டுமல்லாது, பல்வேறு பயன்பாட்டுக்காக மூன்று குதிரைகளை வளர்த்து வருகிறார்.
''காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்துல மொத்தம் அஞ்சு ஏக்கர் நிலம் இருக்கு. நெல் விவசாயம்தான் பிரதானம். முழுக்க முழுக்க ஜீரோ பட்ஜெட் முறையில பாரம்பரிய ரகங்களைப் பயிர் பண்றேன். ஒரு காலத்துல முப்போகம் நெல்லு வெளைஞ்ச பூமி. பல வருஷமா பருவமழை பெய்யாம போச்சு. கிடைச்ச பாசன தண்ணியை வெச்சு ஒருபோக வெள்ளாமைதான் நடந்துச்சு. அதனால அஞ்சு ஏக்கர்ல மொத்தமா நெல் சாகுபடி செய்யாம, மூணு ஏக்கர்ல மரப்பயிர்களை நட்டுட்டேன். 2007ம் வருஷ கடைசியில, ஈரோட்டுல பசுமை விகடன் நடத்தின ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்பில கலந்துக்கிட்டு, பயிற்சி எடுத்தேன். பயிற்சி முடிஞ்ச கையோட நாலு நாட்டு மாடுகள வாங்கிட்டு வந்து தொழுவத்துல கட்டினேன். அதுல இருந்து பாலேக்கர் சொல்லிக் கொடுத்த மாதிரிதான் பண்ணையம் பண்றேன்.
நாட்டு ரக நெல் வகைகள்!
மாப்பிள்ளை சம்பா, கிச்சிலி சம்பா, பூங்கார்னு போன போகங்கள்ல மாத்தி மாத்தி நடவு செஞ்சிருந்தேன். அதை இருப்பு வெச்சு விதைநெல்லாகவும், அரிசியாகவும் கேட்கிறவங்களுக்குக் கொடுத்துட்டு இருக்கேன். இந்த போகத்துல சொர்ணமசூரி ரக நெல்லை நடவு செஞ்சிருக்கேன். இதோட மொத்த வயசு 120 நாட்கள். இப்ப 70 நாள் பருவம். பூட்டை எடுத்திடுச்சு. தை மாசம் அறுவடை செய்யலாம்.
பிழையில்லா விளைச்சலுக்கு பீஜாமிர்தம்!
அடுத்த போக வெள்ளாமைக்குத் தேவையான விதைநெல்லை நேர்த்தி செஞ்சு சேமிச்சு வெச்சுக்குவேன். அதுக்கு பீஜாமிர்த கரைசலைத்தான் பயன்படுத்துறேன். வளரும் நாற்றுகள்ல வேர் சம்பந்தமான நோய்களைக் கட்டுபடுத்த இந்த பீஜாமிர்தம் உதவியா இருக்குது. நெல்லை நாற்றங்கால்ல விதைச்ச 15ம் நாள்ல ஒரு கைக்களை எடுத்து, 10 லிட்டர் அமுதக்கரைசலை பாசன தண்ணியில கலந்து விட்டா போதும். முப்பது நாள்ல இருந்து நாப்பது நாளுக்குள்ள நாத்து தயாராகிடும். ஒரு போகம் முடிஞ்சதும், வயல்ல ஆட்டுக்கிடை, மாட்டுப்பட்டி போட்டுடுவோம். அதனால ஆட்டுப் புழுக்கை, மாட்டுச் சாணம் ரெண்டும் மண்ணுல மண்டிக் கிடக்கும். இது நல்ல அடியுரமா இருக்குது.
அறுவடைக்கு இயந்திரங்களைப் பயன்படுத்துறது கிடையாது. கருக்கறுவாள் மூலமா அறுவடை செஞ்சு, களத்து மேட்டுல கதிரடிச்சுக்குவோம். எனக்கு ஏக்கருக்கு சராசரியா 1,700 கிலோ நெல் கிடைக்குது. இதை நேர்த்தி செய்து 700 கிலோவை விதை நெல்லா, கிலோ 50 ரூபாய்னு விற்பனை செஞ்சுடுவேன். இதன் மூலமா 35 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஆயிரம் கிலோ நெல்லை அரிசியா அரைக்கிறப்போ... 600 கிலோ அரிசியும், 400 கிலோ தவிடும் கிடைக்கும். ஒரு கிலோ அரிசி 70 ரூபாய்னு 42 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன். தவிடை மாடுகளுக்குத் தீவனமாக வெச்சுக்குவேன். முழுக்க முழுக்க ஜீரோ பட்ஜெட் முறையில செய்றதால ஏக்கருக்கு அதிகபட்சம் 10 ஆயிரம் ரூபாய்தான் செலவாகும். இந்தக் கணக்குல ஏக்கருக்கு 65 ஆயிரம் ரூபாய் லாபம். மாட்டுக்கான தவிடும், வைக்கோலும் போனஸ்' என்று புன்னகைத்த லோகநாதன், தனது ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றி விவரித்தார்.
ஒன்றின் கழிவு.. மற்றொன்றின் உணவு!
'எங்கிட்ட நாட்டுப் பசுக்கள் 5, வெள்ளாடு மற்றும் குட்டிகள் 20, செம்மறி ஆடுகள், கோழி மற்றும் குஞ்சுகள்20, வாத்துகள்12, குதிரைகள் 4 இதெல்லாம் இருக்கு. மாடுகளோட சாணம், கோமியத்தை வெச்சு ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், பீஜாமிர்தம் மாதிரியான ஜீரோ பட்ஜெட் இடுபொருட்களை பைசா செலவில்லாம தயாரிச்சுக்கிறேன். இதுபோக வீட்டுக்குத் தேவையான பசும்பால் கிடைச்சுடுது. இந்த நாட்டு மாடுகள் மூலமா வருஷத்துக்கு 3 கன்னுகள் வரைக்கும் எடுத்து விற்பனை செய்றேன். இதன் மூலமா 30 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. வருஷத்துக்கு 15 ஆட்டுக் குட்டிகளை விற்பேன். இதன் மூலமா குறைந்தபட்சம் 30 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. ஆடுகளோட புழுக்கை, மூத்திரத்தை எடுத்து சர்க்கரைப் பாகு கலந்து ஆட்டூட்டம் தயாரிச்சு... எள், தட்டைப்பயறு மாதிரியான வரப்புப் பயிர்களுக்கு கொடுக்குறேன். செம்மறி ஆடுகள், வயல்ல இருக்கற களைகளைக் கட்டுப்படுத்திடுதுங்க.. அதுகளோட புழுக்கையும் மண்ணுக்கு உரமாகி, உடனடியா பலன் கொடுக்குது. வருஷத்துக்கு அஞ்சு செம்மறியாட்டுக் குட்டிகளை விற்பனை செய்றது மூலமா 15 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. கோழிகள் மூலமா கிடைக்குற முட்டைகளைப் பொரிக்க வெச்சுடுவேன். இதுல கிடைக்கிற சேவல் குஞ்சுகளை மட்டும் தனியா வளர்த்து, பெரிய சேவலா விற்பனை செய்றேன். இதன் மூலமா வருசத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. வாத்துகள் வயல்ல மேய்ஞ்சு, புழு பூச்சிகளைத் தின்னு காலி செய்யுதுங்க. அதோட எச்சம் பயிருக்கு உரமாகுது. வாத்து முட்டைகள் விற்பனை மூலம் ஒரு சின்ன வருமானமும் கிடைக்குது.
5 அடி இடைவெளியில, மூணு ஏக்கர்ல 8 ஆயிரம் சவுக்கு மரங்களை நட்டு மூணு மாசம் ஆகுது. நாலு வயசுல 200 ஈட்டி மரங்களும் நம்ம பண்ணையில இருக்கு. வயல் முழுக்க வரப்புல தட்டைப்பயறை விதைச்சு இருக்கேன். அதனால வரப்புகள்ல களைகள் கட்டுப்படுறதோடு, வயல்ல இருக்கற மற்ற பயிர்களை நோக்கி வர்ற புழு, பூச்சிகளை ஈர்த்து, பயிர்களையும் பாதுகாக்குது இந்த தட்டைப்பயறு. கூடவே, இதன் மூலமாவும் ஒரு வருமானம் கிடைக்குது'' என்ற லோகநாதன், நிறைவாக, ஆத்மதிருப்தி போதும்!
'ஜீரோ பட்ஜெட் முறையில பண்ணையம் பண்றதால, வீட்டுக்குத் தேவையான அரிசி, பயறு, பால் எல்லாம் செலவில்லாம கிடைச்சுடுது. ஆடு, மாடுகளுக்குத் தேவையான தீவனமும் கிடைச்சுடுது. இதுபோக ரெண்டு ஏக்கர்ல இருந்து நெல், கால்நடைகள் மூலமா வருஷத்துக்கு ஒன்றரை லட்ச ரூபாய் லாபம் கிடைக்குது. மூணு ஏக்கர்ல இருக்கற மரப்பயிர்கள் மூலமா இன்னும் நாலஞ்சு வருசத்துல ஒரு தொகை கிடைக்கும். இப்படியெல்லாம் லாபக் கணக்குப் போட்டு நான் சொல்றதால, பணம்தான் என்னை திருப்திப்படுத்துதுனு நினைச்சுடாதீங்க. இந்த ஒருங்கிணைந்த பண்ணையில கிடைக்கிற விலைமதிப்பில்லாத ஆத்மதிருப்திக்கு இணையே இல்லீங்க.' என்று சொல்லி விடைகொடுத்தார்.
பீஜாமிர்தம்!
தண்ணீர் 10 லிட்டர், மாட்டுச் சாணம் 3 கிலோ, மாட்டு சிறுநீர்3 லிட்டர், சுத்தமான சுண்ணாம்பு30 கிராம் இவற்றை ஒரு வாளியில் இட்டு, ஒரு கைப்பிடி அளவு வரப்பு மண்ணையும் சேர்த்து, நன்றாகக் கலக்கி... 24 மணிநேரம் ஊறவிட வேண்டும். இதுதான் வல்லமையுள்ள பீஜாமிர்தம். விதைக்கும் முன்னர் விதைநெல்லை இந்தக் கரைசலில் போட்டு, இரண்டு மணி நேரம் ஊறவிட்டு, ஈரப்பதம் போக உலரவைத்து, நாற்றங்காலில் விதைக்கலாம்.
ஜீரோ பட்ஜெட் நெல் சாகுபடி!
லோகநாதன், ஜீரோ பட்ஜெட் முறையில் சொர்ணமசூரி ரக நெல் சாகுபடி செய்யும் முறை இதுதான் நன்கு உழுது தயார் செய்த வயலில், நாற்றுக்கு நாற்று 25 சென்டி மீட்டர் இடைவெளி இருக்கும்படி, ஒற்றை நாற்று முறையில் நடவு செய்ய வேண்டும். நடவு செய்த 20 மற்றும் 40ம் நாட்களில் கைகளால் களை எடுத்து, 100 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரில் கலந்துவிட வேண்டும். இது, மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளை பலமடங்கு பெருக்குவதுடன், ஆழத்தில் இருக்கும் மண்புழுக்களை மேலே வரச்செய்து பயிர்களுக்குத் தேவையான நுண்ணூட்டங்களைக் கொடுக்கச் செய்கிறது. அவ்வப்போது பயிரின் வளர்ச்சியைப் பொறுத்து ஜீவாமிர்தத்தை பாசன நீரில் கலந்து வர வேண்டும்.
அமோக விளைச்சலுக்கு அக்னி அஸ்திரம்!
பயிர்கள் பால் பிடிக்கும் பருவத்தில் குருத்துப்புழு, இலைச்சுருட்டுப்புழு, கதிர்நாவாய்ப்பூச்சி, வெள்ளை ஈக்கள் வர வாய்ப்புகள் உண்டு. 100 லிட்டர் தண்ணீரில், இரண்டரை லிட்டர் அக்னி அஸ்திரம், 3 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரைக் கலந்து, அதிகாலை வேளையில் புகைபோல் தெளித்தால்... பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் அனைத்தும் போய்விடும். மற்ற ரசாயன பூச்சிக்கொல்லிகளைப் போல் வாரம் ஒருமுறை தெளிக்கவேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது. ஜீரோ பட்ஜெட் விவசாயத்தைப் பொறுத்தமட்டில் நோய்தாக்குதல் தென் பட்டால் மட்டும், அக்னி அஸ்திரத்தைப் பயன்படுத்தினால் போதுமானது. அசுவிணி, செம்பேன் மற்றும் பூஞ்சணத் தொற்று தென்பட்டால், மாதம் இரண்டு முறை பிரம்மாஸ்திரம் தெளிக்கவேண்டும். தொடர்ந்து காய்ச்சலும் பாய்ச்சலுமான நீர்ப்பாசனம் கொடுத்து வந்தால், 120ம் நாளில் அறுவடை செய்யலாம்.
செலவில்லாமல் குடற்புழு நீக்கம்!
கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய, தான் பயன்படுத்தும் வழிமுறைகள் பற்றிப் பேசிய லோகநாதன், 'ஆடு, மாடுகளுக்கு வருஷத்துக்கு ரெண்டு தடவை குடற்புழு நீக்கம் செய்யணும். இதுக்காக மருந்துக்கு எங்கயும் அலைய வேண்டியதில்லை. தெளிஞ்சு, கண்ணாடி மாதிரி இருக்கற சுண்ணாம்புத் தண்ணியைக் கொடுத்தாலே போதும். தன்னால குடல்ல இருக்கற புழு, பூச்சிக வெளியே வந்திடும். மாட்டுக்கு 500 மில்லி; ஆட்டுக்கு 200 மில்லி; ஆட்டுக்குட்டிக்கு 100 மில்லி; குதிரைக்கு 500 மில்லிங்கிற அளவுல கொடுக்கணும். 50 வருஷமா இதைத்தான் கொடுத்துட்டு இருக்கேன்' என்றார்.
தொடர்புக்கு,
லோகநாதன்,செல்போன்: 9865590883.
சிலிர்க்க வைக்கும் ஜீரோ பட்ஜெட் நெல்
சிலிர்க்க வைக்கும் ஜீரோ பட்ஜெட் நெல்
Subscribe to:
Posts
(
Atom
)